kathal sokam

Tuesday, January 4, 2011

காதல் சோகம்

காதலியே
சிந்தித்துப் பார்
நீ காதலியானது உனக்கே நியாயமாகத் தோன்றுகிறதா
இப்படிக் கவிதை எழுதிக் காவியம்
காண்பதில் பயன் என்ன உனக்கு
பாடுபட்டு படிக்கிறாய் பாடங்களையா – அல்ல
கடிதங்களை
பாழாய்ப் போன நித்திரை நடுச்சாமம்
வருவதில்லையா – ஏன்
அவன் உன் நினைவுகளைக்
கலைத்துக் கொண்டே இருக்கின்றானா.

காதலியே
சிந்தித்துப் பார்
சிதையாமல் கிடந்த உன் இதயத்தை
சிதைத்த அவன் இப்போ
“சிதைந்து போன ஓவியமே” எனக் குற்றம் சாட்டுகின்றானா
இது தான் அறியா வயதில் தெரியாமல் வருவது
அறிந்த பின்னும் விட முடியாமல் இருப்பது.

காதலியே
சிந்தித்துப் பார்
சின்ன வயதில்
துள்ளித் திரிய வேண்டிய வயதில்
இப்படி சிணிங்கித் திரிவது உனக்கே
நியாயமாகத் தோன்றுகிறதா
விளங்காமல் விபரீதத்தில் காலை வைத்துவிட்டாய் காதலியே
உன் எதிர் காலத்தில் புதைந்து போகாமல்
இப்போதே சேற்றிலிருந்து காலை சிதையாமல்
எடுத்துக் கொள்.

காதலியே
சிந்தித்துப் பார்
உனக்காக உன் பெற்றோர் பட்ட
கடன்களை – இல்லை இல்லை துன்பங்களைச்
சற்றே நினைத்துப் பார்
சிறு வயதிலிருந்து உன்னை முழுமையாக்க
அவர்கள் பட்ட துயரங்களை
நீ துடைக்க வேண்டாமா
பெற்றவர் சேர்த்த சொத்துக்கள் உன்னைச் சாரும்போது
அவர்கள் பட்ட கடன்களும் உன்னைச் சாருமடி பெண்ணே.

காதலியே
சிந்தித்துப் பார்
நீ உனது தந்தைக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில்
உவத்திரமல்லவா செய்யப் போகிறாய்
“இவன் என் காதலன்; பதினாறு வயதில்
என் பக்கம் வந்தவன்; என்ன செய்தவன்;
இப்போதென்ன செய்கிறான்; இனி என்ன
செய்யப் போகிறான் – எனக்கே தெரியாது” என்று
அறிமுகம் செய்யப் போகிறாயா
இது எல்லாம் உனக்குத் தேவைதானா
இன்னும் பத்து வருடங்களுக்கு என்னென்ன நடக்குமோ
உன்னால் கட்டுப் படுத்த முடியாது
ஏன் அவன் “மீண்டும்” மனம் மாறலாம்
அப்போது உனது பெற்றோருக்கு
நீ என்ன சொல்வாய்.

காதலியே
சிந்தித்துப் பார்
சிதைந்து போகக் கூடிய உனது
வருங்கால ஓவியத்தை
நீதான் மீண்டும் வரையவேண்டி வரலாம்
உனக்குள் ஓர் கேள்வியை எழுப்பு
இவன் – காதலன் – இப்போது தேவைதானா?
இவனால் எதிர்காலத்தில்
உனக்கென்ன பயன் – அல்லது
காதலனால் வரப்போகும்
இன்னல்களை சற்றே சிந்தித்துப் பார்
பத்து வருடத்திற்குள்
என்னவென்றாலும் மாறலாம்
அத்தனைக்கும் நீயே தான் பொறுப்பு – இப்போது
முடிவை மாற்றாவிட்டால்.

காதலியே
சிந்தித்துப் பார்
காதல்; காய் கனியாக முன்பே
வெம்பி விழும் உறவைப் போன்றது
இன்று வரும் நாளை போகும்
எதிர் நாள் “மீண்டும்” வரலாம் – ஆனால்
உனது எதிர் காலம்
சென்றால் வராது
கழிந்தன கழிந்தவை தான்
இனிப் புதியன புக வழிவகுப்பாயாக.

காதலியே
சிந்தித்துப் பார்
வாழ்க்கையே சோகமென சோம்பி விடாமல்
புதுத் தென்புடன் ஒரு புதிய பாதையைத் தொடங்கு
உனக்குள் படுத்துறங்கும் அந்தச் சோகப் பெண்ணைச்
சிதைத்து விட்டு ஒரு “புதிய காதலி”யாக – இல்லை இல்லை
ஒரு பாரதி கண்ட புதுமைப்
பெண்ணாக உருவெடுத்து வா
நீ செய்ய வேண்டியவைகள் ஏராளம் உண்டு
செய்து முடிந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதே
இனி அப்படி நடக்கவும் விடாதே.


''''''' நண்பனின் காதலிக்கு எழுதிக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பது விளங்குகிறது. நண்பனின் காதலிக்கு காதல் வேண்டாம் என்று எழுதியிருக்கிறானே, இவனும் நல்ல நண்பனா என்பது தானே? அப்படி எழுதச் சொன்னதே எனது நண்பன் தான்!........ 

1 comment: