kathal sokam

Friday, January 14, 2011

சாபக்கேடு


அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் தட்டுப்பாடு வரிசையில் நின்று எனது உந்துருளிக்கு பெற்றோல் நிரப்பினேன் அப்போது தான் ஒன்று தோன்றியது. யாழ் மக்களின் வாழ்வியலில் பல ஆற்றமுடியாத நோய்கள் வேரூன்றி போயிருக்கிறது.வாழ்கை முழுவதும் ஓடி ஓடியே நிம்மதி தேடிய மக்களின் மன உளைச்சலின் விளைவாக கூட இது இருக்கலாம்.


எங்களுக்கு எதுவும் இலகுவாக கிடைத்திருக்க வில்லை. இருக்க இடம் குடிக்க தண்ணீர் தொடங்கி பயண அனுமதி (டோக்கன் கிளியரன்ஸ்) வரை நின்று நின்று நொந்த கதைகளை எங்கள் கால்கள் சொல்லும்.


குழாய்கிணற்றில் தண்ணீருக்கு, லொறியில் வரும் பாணுக்கு, சங்ககடையில் அரிசி,மா,சீனி,பருப்புக்கு,பலசரக்குகடையில் பால்மாவுக்கு மண்எண்ணெயக்கு, விதானையிடம் கூப்பன் காட்டுக்கு, பயண அனுமதிக்கு பின்னர் பேருந்துக்கு கப்பலுக்கு அந்தந்த இடங்களில் தேனீர்விடுதிக்கு என ........ நீண்டு செல்கிறது இந்த பட்டியல்.....

நாங்கள் வரிசையில் நிற்காமல் எதை பெற்றிருக்கிறோம்........
எங்கள் விதி அப்படி.. ஆனால் எங்கள் செயற்பாடுகள் தான் மிகக்கொடுமை.


ஒரு வரிசையில் ஒழுங்காக நின்று வந்த வேலையை விரைவாக முடித்து செல்லும் எண்ணம் எவருக்கும் வருவதில்லை. நீ முந்தி நான் முந்தி என்று யார் முந்துவது என்பது தான் பிரச்சனை, ஒரு வரிசையில் ஆரம்பித்தது இரண்டாகி மூன்றாகி தேவையற்ற ஒரு நெரிசல் உருவாக்கப்பட்டிருக்கும்.


நல்ல உதாரணம் வவுனியா பிரயாணம் தான்....
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்த பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) தளர்த்தப்பட்டிருப்பது நிம்மதியை தந்தாலும் இன்று வரை இந்த நான்கு ஆண்டுகளில் இந்த யாழ் - பிறமாவட்டங்களுக்கான பயணம் விழுங்கியுள்ள நேரம்....

யாழ்-திருகோணமலை கப்பல் பயணத்தைப்பற்றி சொல்ல விரும்பவில்லை அந்த கொடுமையை அனுபவித்து தான் பாரத்திருக்க வேண்டும் தவறவிட்டவர்களுக்கு இனி சந்தர்ப்பம் இல்லை.


கிளியரன்ஸ் பெறுவதற்கு - இரண்டு கிழமை
இதைதவிர  காலையில் ரயில்வே நிலையத்தில் 1 மணித்தியாலம்
பின்னர் சிங்கள மகா வித்தியாலயத்தில் மூன்று மணித்தியாலம்
பயணம் மூன்று மணித்தியாலம்
இவ்வளவும்143 km நீளமான ஒரு சிறிய தூரத்தை கடப்பதற்கு சாமானியன் படவேண்டிய துன்பங்கள். A9 பயணமென்பது ஒரு சாகசம்.


வவுனியா செல்வதற்கு நிற்கும் இடத்தில் பெரிய வரிசை ஒன்று இருக்கும் எல்லோரும் முதலில் பதிந்து விட்டுதான் வருவார்கள் ஒருவரையும் திருப்பி அனுப்பவது கிடையாது. ஆனாலும் எங்கள் சனம் அடிபடும் எங்கு செல்வதற்கு 300 மீற்றர் தூரத்திலுள்ள இன்னொரு இடத்திற்கு செலவதறகு அங்கு சோதனைக்காக இறக்கி விடுவார்கள்.பிறகு இன்னொரு வரிசை....


போகும் வழியில் பன்னிரண்டு பேருந்துகளும் ஒரு இடத்தில் தேனீருக்கு ஒரே நேரத்தில்  நிறுத்தப்பட அந்த கடையில் ஒரு குருக்ஷேத்திரமே நடக்கும். எத்தனை பேர் பட்டினி கிடந்து வருகிறார்கள்..? ஒரு இரண்டு மணித்தியாலத்தில் அப்படி என்ன பசி...?
நணபன் ஒருவன சொன்னான் 'சனம் கேவலமாக நெரிபடுதுகள்' என்று. பதினெட்டு மணித்தியாலம் கப்பல்ல காயஞ்சு போன சனத்துக்கு நான்கு மணி நேரம் வயித்த நிரப்பாமல் இருக்கமுடியாமல் போவது ஏன்...?
இல்லை அடிபட்டு இடிபட்டு வாங்கி தினபதில் தான் ஒரு திருபதியோ தெரியவில்லை...!


ஐந்து பேருந்துகளையும் ஒரு கடையில் நிறுத்தியவனை குறை சொலவதா வரிசையில் நின்றே வாங்கி பழகாத எம் மக்களை குறை சொல்வதா...?
இதை விட பெரியவரலாறு ஆரம்ப காலத்தில் கப்பலில் சென்றவர்களிடம் கேட்டால் தெரியும்....!


யார் போட்ட சாபம் எப்போது திருந்த போகிறோம்...!


"தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என அடிக்கும்" சுளகு போல தன்னுடைய காரியம் என்றால் எத்தனை ஆவேசம் எத்தனை பலம் எம்மக்களுக்கு. இத்தனை பலமும் இத்தனை வேகமும் ஒரு நோக்கத்திற்காக ஒரே திசையில் செலுத்தப்பட்டால் எங்களால் அடைய முடியாதது எதுவும் இல்லை.ஆனால் நாங்கள் தான் சுயநலத்திற்கு உதாரணமானசபிக்கப்பட்ட தமிழர்கள்   ...! அல்லவா எப்படி முடியும்..?


 நானும் இரண்டு நணபர்களும் கந்தசாமி படம்பார்க்க ஒரு திரையரங்கிறகு சென்றோம். அந்த திரையரங்கில் அண்ணளவாக நாநூறு இருக்கைகள் இருக்கும். வந்த கூட்டமோ (யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் தலைமுறை ) ஒரு நூறுதான், "போட்ட அட்டகாசம்"..... வெறுத்து போனது...!
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியாக போய் நான் மூணு இருக்கைகளில் உட்காந்து படம் பாரத்தேன். இருந்தது ஒரு ஒன்று இரண்டு கால்களுக்கும் ஒவ்வொன்று.

No comments:

Post a Comment