kathal sokam

Friday, January 14, 2011

மெல்லத் தமிழினிச் சாகும்.. தமிழன் ???????

மார்பில் விழுந்த நீர்த்துளிகள் மாறனை விழித்தெழச் செய்தன. மழை பெய்கிறதோ என நினைத்து மார்பில் சாய்ந்திருந்த மனைவியை பார்த்தபோதுதான் தெரிந்தது மார்பை நனைத்தது கண்ணீரென்று..

"குட்டி அழாதேயடி.. நாங்கள் இண்டைக்கு பாதுகாப்பான இடத்துக்கு போயிடுவம்"

சொல்லிக்கொண்டிருக்கும்போதே "அந்த" பாதுகாப்பான இடத்தை பற்றி எண்ணி மனதுக்குள் வேதனை அதிகரித்தது. நேற்றும் பக்கத்து வீட்டு கணேஷ் அண்ணனின் குடும்பம் கூண்டோடு கைலாசத்துக்கு போய்விட்டது... பொழுது புலர்வதற்கு இன்னும் அரை மணி நேரமிருக்கும்.. இப்போது புறப்பட்டால்தான் போய் சேரலாம்.. சனங்கள் நடக்கத்தொடங்கி விட்டன.

மாறன் ஒரு பொறியியலாளன். சண்டை தொடங்கி சில நாட்களிலேயே வன்னிக்கு வந்து விட்டான். அவன் காதலித்த பூங்குழலி... அவளுக்காக..
இவன் பெற்றோர் சொல்லியும் கேளாமல் அவளை மணமுடித்து நேற்றுடன் இரண்டு வருடங்களாகிவிட்டது. இந்தப் போர்க்காலத்தில் குழந்தை வேண்டாம் என்று அவர்கள் நினைத்த போதிலும் அது முடியாமல் போய்விட்டது. அவள் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணி. அவளை சைக்கிள் இல் வைத்து தள்ளிக்கொண்டு இடம் பெயர்ந்து போய்க்கொண்டிருக்கிறான். நேற்று ஒரு ஆலமரத்தடி, இன்று ஒரு அரச மரத்தடி.. நாளைக்கும் ஒரு புளிய மரமோ வேப்பமரமோ கிடைக்காமலா போய்விடும்..

"குட்டி, எழும்படி சனமெல்லாம் நடக்கத்தொடங்கிற்று"
அவள் கண்களை துடைத்து விட்டு சைக்கிளில் ஏறி இருந்துகொண்டாள்.. டயர் காற்று போய் இரண்டு நாளாயிற்று .

"engineer எண்டால் காரில் கூட்டிப்போவான் எண்டு நினைச்சியா குட்டி?"

"இல்லையப்பா.. நீங்க எனக்க்காகத்தானே வந்தனீங்க, இப்ப இப்படியொரு பிரச்சினயில!!" மீண்டும் அழத்தொடங்கினாள்

"போடி பயித்தியம்.. நீ இல்லாட்டி எனக்கு பயித்தியம் பிடிச்சிருக்கும்.. அது சரி பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கிறது எண்டு நான் முடிவெடுத்திட்டன்.... "வானதி" எப்படி இருக்கு?-"

"பொம்பிள பிள்ளையா?

-"ம்ம் பின்ன ?

-"இல்ல பெடியன் தான் .. உங்கள மாதிரி கறுப்பா.. பெயர் "குட்டி மாறன்"

முகத்தில் சிரித்தாலும் அவன் இன்றிரவை பற்றியும் அவள் பிரசவத்தை பற்றியும் அடி மனதில் சிந்தித்துக்கொண்டு... அவளது கண்ணீரை துடைத்து விட்டு சைக்கிள் ஐ தள்ளலானான்..

சனம் சத்தம் சந்தடி இல்லாமல் நகர்ந்து கொண்டு இருந்தது..

"டமால்"
பின்னால்.. ஒரு ஷெல் ...
ஐயோ ஐயோ என்ர பிள்ளை .. என்ர பிள்ளை .. காப்பாத்துங்கோ என்று ஒரு கிழவியின் குரல்.. சனம் சிதறி ஓடியது.. கிழவியின் மகனுக்கு வயது முப்பது இருக்கும். இவன் அருகில் போக முன்பே அவன் உயிர் பிரிந்து இருந்தது. மீண்டும் ஒரு ஷெல் விழ மனைவியின் ஞாபகம் வரவே..

மீண்டும் மனைவியை சைக்கிள் இல் ஏற்றிக்கொண்டு அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறான்..

"அப்பா எனக்கு வயிற்றுக்குள்ள ஏதோ செய்யுது!!"

"எனக்கு நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது "

வியர்வை வடிய மூச்சு வாங்க ஓடுகிறான்...

..............

........................
........

பூங்குழலி இன் கண்கள் திறக்கின்றன.. உடம்பில் இனம்புரியாத ஒரு வலி ..மாற்றம்.. எங்கே மாறன்.. கண்களில் ஒரு வித பயம் பற்றிக் கொள்கின்றது.. பக்கத்தில் யாரது..

"அக்கா எழும்பிட்டீங்களா? நீங்க பிளச்சுட்டீங்க.-"
-"-பிளச்சுட்டேனா-? -மாறன் -??-" பேச குரல் வரவில்லை..

-"மாறன் அண்ணை அங்கேயே முடிஞ்சுது.. என்ர அப்பாவும் அம்மாவும் சரி.. நானும் தம்பியும் தப்பிற்றம். அந்த டாக்டர் தான் உங்கள காப்பாற்றினார்-"

பெட்டிக்கடை கமலி அழுதாள்..
இவளுக்கு தொண்டை அடைத்தது அழுகை வரவில்லை.... இனம் புரியாத வலி மனதை பிழிந்தது.. இதயம் கிழிந்து விட்டதாக உணர்ந்தாள்.. மயக்கம் வந்தது...

......
.....
.....

மீண்டும் கண்கள் திறக்கின்றன.. ஐயோ மாறன்.......

"அம்மா எப்படி இருக்கீங்க ?"

யாரது?? கையில் கறுப்பு கயிறுடன்.. எமனா? அப்பாடா, மாறனிடமே என்னையும் கொண்டு போங்கோ.. அவர் கயிறை நெஞ்சில் வைத்து பாக்கிறார்.. ஐயோ இவன்தான் என்ர உயிரை காப்பாத்தின டாக்டர்... கொலைகாரன்..
என்ர குழந்தை... என்ர குழந்தை எங்கே..??

வயிற்றை தடவ கையை எடுக்கிறாள்

என்ர கை எங்க? ரெண்டு கையும் இல்லையா?
"அம்மா பொறுங்கோ.."
டாக்டர் தன்னை பரிதாபமாக பார்ப்பது தெரிந்தது.. அவரது உச்சரிப்பில் இருந்து அவர் சிங்களவராக இருக்க வேண்டும் என்று தெரிந்தது..

" உங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்திருக்கு"

"ம்ம்.. டாக்டர் நான் பிள்ளைக்கு பெயர் வைக்கோணும்"
அரை மயக்கத்தில் அனுங்கினாள்..

-"என்ன?"

-"பெயர் வைக்கோணும்"
டாக்டருக்கு புரியவில்லை.. பக்கத்தில் நிண்ட கமலிக்கு புரிந்துவிட்டது..

-"ஐயா அக்கா பிள்ளைகளுக்கு பெயர் வைக்க வேணுமாம்.. ஐயோ நீங்க ரெண்டு கையையும் ரெண்டு காலையும் எடுத்ததுல ஏதோ நடந்துட்டு ..-"
என்று பயத்துடன் சொன்னாள் கமலி

டாக்டர் கமலியை முறைத்தார்.

"நீங்க சொல்லுங்க அம்மா- என்ன பெயர் வைக்க?"

-கமலி பேச முடியாமல் முகத்தில் முகமூடி இருந்தது.. டாக்டர் அதனை எடுத்து விட்டார்.. பூங்குழலி மெல்லிய குரலில் அனுங்கினாள்

-"உங்களுக்கு தெரியாதா டாக்டர்.. எண்ட பிள்ளைகளாவது நல்ல வாழக்கூடிய மாதிரிஏதாவது "சில்வா" "பெரேரா" எண்டு ஏதாவது நல்ல பேரா....-"


"நர்ஸ் 
Emergency trolley...."டாக்டர் பதறினார்..

அவள் உயிர் மெல்ல பிரிந்தது..

டாக்டர் மனதுக்குள் அழுததை அவர் முகம் காட்டி கொடுத்தது..

No comments:

Post a Comment