காலை 7.30 மணி அவசர அவசரமாக எனது மோட்டார் வண்டியை ஸ்ரார்ட் செய்து புறப்பட தயாரானபோதுதான் அது நடந்தது கர்ர்ர்ர்ர்…. என்று ஒரு சத்தம் வண்டியிலிருந்து எனக்கு ஒன்றுமே புரியவில்லை அடப்பாவி மூணு மாசமா கவனிக்காம விட்டதுக்கு இப்பிடியா பழிவாங்கணும் என எண்ணியபடியே எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் பிரயோகித்து பார்த்தேன் அடங்கவில்லை வண்டி. சரி .. நம்மால முடியாது எங்காவது வண்டி வைத்தியசாலையில்தான் அனுமதி பண்ணவேண்டும் இந்த காலை வேளையில் எவன் திறந்திருப்பான் …? என்று எண்ணிய போதுதான் எனது வீட்டிலிருந்து சிறிய தூரத்திலேயே ஒரு புண்ணியவான் தனது வீட்டோடு சேர்த்து ஒரு மோட்டார் வண்டி திருத்தும் நிலையம் நடத்துவது நினைவுக்கு வந்தது. அப்பாடா என்று ஆசாமியை அவசர அவசரமாக அங்கு அனுமதி செய்தேன் வாசலிலேயே வரவேற்ற திருத்துனர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து..
சின்னவன் … சின்னவன்…. ………… அந்த சாவிகளை எடுத்து வாடா ………… கழற்றடா கெதியா கெதியா……. உத்தரவுகளை பிறப்பித்தார் …
அப்போதுதான் அந்த சின்னவனை நான் கவனித்தேன்..!!
ஏற்கனவே இங்கு சிறுவர்களை வைத்துத்தான் வேலைவாங்கப்படுவதாக கேள்விப்படிருக்கிறேன் ஒருபோதும் வந்தது கிடையாது எனது வண்டிக்கு பிடித்த வைத்தியர் தூரத்தில் இருக்கிறார் அவரிடந்தான் பெரும்பாலும் வண்டியை கூட்டி செல்வது வழக்கம் இப்போது அவசர சிகிச்சை வண்டிக்கு….. பெறவேண்டி இருந்த காரணத்தினால் தான் இங்கு வரவேண்டி இருந்தது.
சிறுவர்களுக்கு கட்டாய கல்வி என்று… எத்தனை பேர்முழங்கினாலும் இங்கெல்லாம் அவை வெறும் வாயளவில்தான் எத்தனையோ சிறுவர்கள் இப்படியாக வண்டி திருத்தும் நிலையங்களிலும். உண்வு விடுதிகளிலும் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அது தெரிந்ததுதான் …
ஆனாலும் இப்போது நான் கண்ட சின்னவனை பார்த்த போது எனக்கு மனதை பிழிந்தது … அவனுக்கு ஒரு பத்து தொடக்கம் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் தோற்றம் வயதை விட சிறியதாக இருந்தது ஒல்லியான தேகம் வெள்ளை பிஞ்சுகைகள் … எப்படி இந்த கைகளால் இப்படி கடின வேலை எல்லாம் செய்கிறான் …. என்றவாறு அவனை கவனித்தேன் ஆம் !! தனியே கைக்களால் அவனால் முடியவில்லை ஒவ்வொரு நட்டையும் கழற்றும் போது அவன் உடல் பலம் முழவதையும் பிரயோகித்து தான் கழற்றிக்கொண்டிருந்தான் …நட்டுடன் சேர்த்து உடலும் சுழன்றது.. எனக்கு அந்த தடியன் உரிமையாளன் மீது கொடிய கோபம் வந்தது இவனுடைய பிள்ளை என்றால் இப்படி …. என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே உள்ளிருந்து …
அப்பா அப்பா ஒரு சிறுமியின் குரல்… என்ன பிள்ளை… நான் வெளிக்கிட்டிட்டன் … சரி கவனமாய் போய்ற்று வாங்கோ …. நான் சின்னவனை பார்த்தேன் எங்கோ வெறித்தபடி இருந்தான். எனக்கு அவன் முகத்தில் ஒன்றையும் காணமுடியவில்லை வெறுமையாக இருந்தது…
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது உள்ளிருந்து பாடசாலை சீருடையுடன் ஓடி வந்த ஒரு பத்து வயது சிறுமி…அப்பா.. என்ர ஆசை அப்பா…என்று தந்தையை ஆசையுடன் கட்டியணைத்து மூன்று தடவை முத்தமிட்டு போய்ற்றுவாறன்பா… என்ற சொல்லியபடி முதுகில் புத்தகபை குலுங்க துள்ளி குதித்தபடி பள்ளிக்கு சென்றது …
விபரிக்க முடியாத கலவையான உணர்ச்சி என்னிடம் …… கோபமும் அனுதாபமும்… மீண்டும் சின்னவனை பார்த்தேன் அவன் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை அவனுக்கு இது புதிதாக இருக்காது பின்னணியில் மீண்டும் அதே குரல் சின்னவன்… என்று அதட்டியபடி இருக்க அவன் எழுந்து உத்தரவுகளை கவனிக்க சென்றான்… சரி தம்பி இனி பிரச்சனை இல்லை.. என்ற படி என்னருகே வந்த அந்த உரிமையாளரை ஒரு மாதிரி பார்த்து விட்டு புறப்பட்டேன்…
போகும் வழியில் சிந்தனை முழுவதும் அந்த சின்னவனிடமேயே இருந்தது .. இவனுக்கு பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று ஆசை இருக்காதா …?
இப்படி இவனை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் பெற்றோர்கள் அனுப்புகிறார்கள் ..?
பெற்றோரை இழந்தவனாக இருப்பானா..? குடிகார அப்பனுக்கு பிறந்திருப்பானா..?
ஒரு வேளை இவனுக்கு இன்னும் பல தம்பி தங்கைகள் இருக்க அவர்கள் படிக்கவேண்டும் என்று இவன் தன் படிப்பை தியாகம் செய்திருப்பானா..?
எனக்கு இப்படி சிறுவனை வேலைவாங்கும் அந்த திருத்துனரின் மேல் வந்த கோபம் நியாயமானதா..?
ஒரு வேளை நீ வேலைக்கு வரவேண்டாம் பள்ளிக்கு போ என்று சொல்லி நிறுத்திவிட்டால் அந்த சிறுவனின் குடும்பத்தின் நிலை என்ன..?
இவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ சின்னவன்கள் எங்கள் சமூகத்தில் எவரும் எதுவுமே செய்ய முடியாது. இவன் வருத்தமெல்லாம் வளரும் வரை மட்டுந்தான் வளர்ந்து இவனும் ஒரு மோட்டார் வண்டி திருத்து நிலையம் வைத்து வாழ்க்கையில் நன்றாக வருவான். இவன் இன்று கஸ்டப்படுவது … ஒரு வித்ததில் ஒரு தொழிற்பயிற்சி .. அந்த உரிமையாளர் இவனை கொடுமைப்படுத்தாதவரை… இந்த ஒரு பதிலை தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை என்னிடம்
No comments:
Post a Comment